டில்லி:

தேர்தல் தோல்வியை அடுத்து அதிமுக பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்.

அப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

நடைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலை அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய பாஜக அமைச்சரவையிலும் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அதே வேளையில் அதிமுகவிலும் ஒற்றை தலைமை கோஷம் தொடங்கி உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக மணி அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் திடீரென டில்லி சென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பியூஸ் கோயல்தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பாஜக சார்பில் முன்னிலை வகித்து வந்தவர்.

இந்த நிலையில், இரண்டு மணிகளும் பியூஸ் கோயலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள கோஷ்டி பூசல், கூட்டணிகளுக்கிடையேயான விரிசல் போன்றவை குறித்து இரு தரப்பினரும் பேசியதாகவும் உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால்,  இந்த சந்திப்பின்போது,  உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடி யாக விடுவிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஸ் கோயலிடம் தமிழக அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கான மனு கொடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், 14வது நிதிக்குழுவின் கீழ் 2017 – 18ம் ஆண்டு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 560 கோடி ரூபாய், 2018 – 19ம் ஆண்டின் நிலுவைத் தொகையான ரூ.607 கோடியை விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பிரதமரின் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தர மத்திய அரசிடம் தமிழக அரசு சாா்பில் கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேரன், நீலகிரி விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத முதல் வகுப்பு பெட்டிகளை மீண்டும் அறிமுகப்படுத்தவும், மதுக்கரை ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள மரப்பாலத்தை விரிவாக்கம் செய்யவும்,கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலின்போது, தேர்தலுக்கு தேவையான செலவுகளை மேற்கண்ட இரு அமைச்சர்கள் (தங்கமணி, வேலுமணி)  மட்டுமே  செய்ய எடப்பாடி கூறியதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக இரு அமைச்சர்களையுமே அதிமுகவினர் ‘மணி அமைச்சசர்கள்’ என்று அன்போடு அழைக்கின்றனர்.

என்னமோ நடக்குது…. மர்மமா இருக்குது….