சென்னை: கொரோனா காரணமாக நீட், ஜேஇஇதேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் நடக்கிறது.  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிம் இந்த தேர்வுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில், நடப்பு ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் மருத்துவப் படிப்பு, பல் மருத்துவச் சேர்க்கை நீட் தேரவை இந்த ஆண்டு ரத்து செய்யவேண்டும்.

இதே கோரிக்கையுடனும்,  12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடமும், உங்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு நடத்த தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  அதை ரத்து செய்ய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும்  இப்போது கொரோனாவுடன் போராடி வருகின்றனர்.

இப்போது தேர்வை நடத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே 2020-21-ம் ஆண்டு மருத்துவ சேர்க்கை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.