சென்னை

கொரோனா வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு அடைந்துள்ள போதிலும் இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது.   தற்போது சீனாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ள போதிலும் மற்ற  நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.   இந்த வைரஸ் இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் அமெரிக்கா உள்ளிட்ட 104 நாடுகளில் பரவி உள்ளது.

இந்தியாவில் இதுவரை சுமார் 39 பேர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தனிமை படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்,   உலகெங்கும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 3200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சென்னையில் நேற்று அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ”இந்தியாவுக்கு ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஆகவே, இவருடன் வந்த 27 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்ததாக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது வரை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 68 ரத்த மாதிரிகளில் 55 மாதிரிகளுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதியுள்ள மாதிரிகளுக்கு இன்னும் முடிவு வரவில்லை.

சென்னை விமான நிலையத்துக்குத் தினசரி 57 விமானங்கள் மூலம் 8500 பேர் வருகின்றனர். இந்த பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  இதன்படி தற்போது வரை 1.72 லட்சம் பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சீனா, இத்தாலி, ஈரான், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய சென்னையில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  விரைவில் தேனியில் அமைக்கப்பட்டு வரும் மையம் செயல்படத் தொடங்கும். தற்போது தமிழகம் முழுவதும் 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆகவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.

மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.  குறிப்பாக வெளி இடங்களுக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.  தமிழக அரசு  உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அளித்துள்ள அறிவுரையின் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.