அரசியல் விளம்பரம் செய்பவர்கள் குறித்த வெளிப்படை கொள்கையை 2018 ம் ஆண்டு முதல் கடைபிடித்து வரும் கூகுள் நிறுவனம், இணையத்தில் செலவு செய்யும் கட்சிகளின் விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள தனது வலைதளத்தில் வசதி செய்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் அதிகம் செலவிடும் கட்சியாக இதுவரை பா.ஜ.க. இருந்து வந்த நிலையில், இந்த தேர்தலில் அவர்களுக்கு சவால் விடும் வகையில் அதிகம் செலவு செய்த கட்சியாக தி.மு.க. உள்ளது.

Image Courtesy : TOI

2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இணையதளங்கள் மூலமாக மேற்கொண்ட பரப்புரையின் காரணமாக குறைந்த சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி கொண்டு ஆட்சி அமைத்தது பா.ஜ.க.

அதுமுதல், மாநில சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் என்று அனைத்து தேர்தலிலும் இணையதள பரப்புரைக்கு என்று தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்து வந்த பா.ஜ.க. 2019 ம் ஆண்டு தேர்தலில் 17 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இணையதளங்களுக்கு செலவழித்து தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இது காங்கிரஸ் கட்சியை விட 5 மடங்கு அதிகம் என்பதால் இளம் தலைமுறையினரின் வாக்குகளை பா.ஜ.க. வசப்படுத்த உதவியது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்கள் வரை சுமார் 17 கோடி ரூபாய் செலவு செய்த பா.ஜ.க. தற்போது 5 மாநில தேர்தலுக்கு 1.5 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்திருக்கிறது.

பா.ஜ.க. தி.மு.க.
17-02-2019 1119500 07-02-2019 18310000
24-02-2019 5820000 14-02-2019 21530250
03-03-2019 2075500
10-03-2019 2696250
17-03-2019 619750
24-03-2019 2872750
31-03-2019 188750
07-04-2019 15785500
14-04-2019 18013000
21-04-2019 29903000
28-04-2019 21467000
05-05-2019 9659000
12-05-2019 11686500

அதே நேரத்தில், அதிகப்படியான இணைய பயன்பாடு மற்றும் ஸ்மார்ட் போன்-களின் பயன்பாடு அதிகமுள்ள தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பா.ஜ.க. வசம் செல்வதை தடுக்க 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக தி.மு.க. சமூக ஊடங்கங்களை பெரிதும் பயன்படுத்தியது.

2019 ஏப்ரல் முதல் மே மாதம் முடிய ஏழு கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 4 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்து நாட்டிலேயே பா.ஜ.க. வுக்கு அடுத்தபடியாக செலவு செய்த இரண்டாவது பெரிய கட்சி என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. வின் பலம் அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 13 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து சமூக ஊடகங்களில் பா.ஜ.க.வை பின்னுக்கு தள்ளியுள்ளது தி.மு.க.

பா.ஜ.க. தி.மு.க. அ.தி.மு.க. 
28-02-2021 251250 28-02-2021 10067000
07-03-2021 1128750 07-03-2021 8743250 07-03-2021 274750
14-03-2021 2313000 14-03-2021 8809000 14-03-2021 9528500
21-03-2021 6908250 21-03-2021 24170500 21-03-2021 15106750
28-03-2021 4658000 28-03-2021 80477250 28-03-2021 45611250

தி.மு.க. வினருக்கு போட்டியாக மாநிலத்திலேயே அதிகம் செலவு செய்த கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது, 2021 மார்ச் மாதம் இந்த களத்தில் குதித்திருக்கும் இவர்கள் இதுவரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்திருக்கின்றனர்.

கூகுள் வலைத்தளம் மூலம் அறியப்பட்ட இந்த விவரங்கள், இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வலைத்தளங்களின் வியத்தகு வளர்ச்சியை அறிவிப்பதாக உள்ளதோடு, வரும் காலங்களில், இணையதள செலவினங்கள் பன்மடங்கு உயரக்கூடும் என்பதை உணர்த்துவதாகவும் உள்ளது.

மேலும், ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட அரசு எந்திரங்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய ஊடகங்கள் துணை போகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், எதிர்கட்சியினருக்கான மாற்று ஊடகமாக சமூக ஊடகங்கள் விளங்கிவருகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.