5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: 5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக பரவலாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந் நிலையில் 48 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் மேலும்  கூறி இருப்பதாவது: திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி, திருச்சிராப்பள்ளி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அதுமட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.