20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க கேரள முன்வந்ததை தமிழகம் நிராகரிப்பு

திருவனந்தபுரம்:

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க கேரள அரசு முன்வந்ததை, தமிழக அரசு நிராகரித்துவிட்டது.


தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. முப்போகம் விளையும் தஞ்சையையும் தண்ணீர் பிரச்சினை விட்டு வைக்கவில்லை.

எனினும், தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளா முன் வந்ததை தமிழக அரசு நிராகரித்த விசயம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் பிரதான நீர் ஆதாரங்கள் வறட்சியில் இருப்பதால், தமிழகத்துக்கு உதவிக் கரம் நீட்ட கேரள அரசு முடிவு செய்தது.

திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் குடிநீரை அனுப்ப கேரள அரசு திட்டமிட்டது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் அலுவலகத்தை, கேரள முதல்வர் அலுவலகம் தொடர்பு கொண்டது.
ஆனால், தற்போதைய சூழலில் இதற்கான அவசியம் இல்லை என தமிழக அரசு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் வேலுமணி மறுப்பு

கேரள அரசு வழங்கும் குடிநீரை தமிழக அரசு மறுத்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி மறுத்துள்ளார்.

தண்ணீர் தர முன்வந்த கேரளாவுக்கு நன்றி தெரிவித்துள்ளோம். ஒரு நாள் மட்டும் 20 லட்சம் லிட்டம் தண்ணீர் என்றால் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்.

சென்னையில் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 எம்எல்டி. தினமும் 2 எம்எல்டி தண்ணீர் அனுப்பினால் சமாளிக்கலாம் என தமிழக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறும் குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.

கேரளா தர முன்வந்த குடிநீரை தமிழக அரசு நிராகரித்ததாக வந்த செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளார்.