சென்னை: மாணவர்கள் பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளி நேரத்தில் மூன்று சிறப்பு தண்ணீர் இடைவேளைகளை பள்ளி கல்வித் துறை நியமித்துள்ளது.

“காலை, மதிய உணவு மற்றும் மாலை – பள்ளி நேரங்களில் மூன்று இடைவேளையின் போது குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று பள்ளி கல்வி இயக்குனர் எஸ் கண்ணப்பன் கடந்த 25ம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்தார்.

தற்போது, ​​பள்ளிகள் காலையிலும் மாலையிலும் இரண்டு 10 நிமிட இடைவேளைகளை அனுமதிக்கின்றன. மாணவர்களுக்கு 45 நிமிட மதிய உணவு இடைவேளையும் கிடைக்கும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான நீரிழப்பு கூட சோர்வு, தலைவலி மற்றும் மோசமான தாங்கும் ஆற்றலுக்கு வழிவகுக்கிறது.

“விழிப்புணர்வு இல்லாததால் பல குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மாணவர்களை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது, மேலும் சிறுநீர் பாதை தொற்று மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களிடையே குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”, என்று சுற்றறிக்கை மேலும் கூறியுள்ளது.

இருப்பினும், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுத்தமான கழிப்பறைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

காஞ்சி காமகோட்டி குழந்தை அறக்கட்டளை மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஜனனி சங்கர் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதன் சிறப்பை விளக்கிய அதே நேரத்தில், குழந்தைகள் இடைவேளையின் போது மட்டுமல்லாது வகுப்பு நேரங்களில் கூட குழந்தைகள் கழிப்பறைகளைப் பயன்படுத்த பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆகவே, பள்ளிகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுத்தமான கழிவறைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பீட்டர் ராஜா கூறியதாவது; “அரசு பள்ளிகள்ல பாதுகாப்பான குடிநீரும், கழிப்பறைகளில் பயன்படுதத போதுமான அளவு நீரும் இருப்பதிலலை. நீர் வசதிகளுடன் கூடிய சுத்தமான கழிப்பறைகளை நாம் உறுதி செய்தால், பள்ளி குழந்தைகள் அதிக தண்ணீர் குடிப்பார்கள். “