சென்னை:

பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.


பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்றைக்குள் பணியில் சேரவேண்டும். இல்லையேல், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு எச்சரிக்கை விடுத்தது. எனினும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு பல்வேறு அமைப்பினரும் சங்கங்களும் ஆதரவளித்து வருகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் ஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக, 8 தலைமைச் செயலக ஊழியர்களை அரசு பணியிடை நீக்கம் செய்தது.
இதனையடுத்து, போராட்டத்துக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்த போராட்டம் மேலும் வலுப்பெற்றதாக போராட்டக் களத்தில் இருக்கும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.