ஊரடங்கால் தமிழக அரசுக்கு வரி வருமானம் 50% வீழ்ச்சி

சென்னை

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தமிழக அரசுக்கு வரி வருமானத்தில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவுதல் அதிகரித்ததால் நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் கொரோனா பரவுதல் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.   இதனால் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.   மக்களில் பலர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டு பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதனால் இங்கு ஊரடங்கு தளர்வுகள் விலக்கப்பட்டுப் பல இடங்களில் மீண்டும் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.   தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக இயங்காததால் தமிழக அரசுக்கு மாநில வரி வருமானம் கடுமையாக குறைந்துள்ளது.   சென்ற வருடம் இதே காலகட்டத்தில் இருந்த வரி வருமானத்தில் 50% குறைந்துள்ளது.

சென்ற வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மாநில வரி வருமானம் ரூ.25,082.52 கோடியாக இருந்தது.  இந்த வருடம் இதே கால கட்டத்தில் ரூ.12.318.18 கோடி ஆகி உள்ளது.   தமிழக அரசின் கணக்குப்படி 2020-21 ஆம் வருட மாநில வரி வருமானம் ரூ,1,33,530.3 கோடி ஆகும்.  அதாவது ஒரு காலாண்டில் ரூ.33.383 கோடி எதிர்பார்க்கப்பட்டது.  இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு எதிர்பார்த்த வரி வருமானத்தில் 63% குறைவாக வாய்ப்புள்ளது.

இந்த வருடம் மே மாதத்தை விட ஜூன் மாதம் வரி வருமானம் அதிகரித்துள்ளது.  இதற்கு மாநிலத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதே காரணமாகும்.   இந்த வருடம் ஜூன் மாதம் மது விற்பனையால் கிடைத்த வரி வருமானம் ரூ.724.3 கோடி ஆகும்.   மது விற்பனை மூலம் கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் ரூ.588.47 கோடியும் 2020 ஆம் வருடம் மே மாதம் ரூ.324.83 கோடியும் வருமானம் வந்துள்ளது.

அடுத்தபடியாக பத்திரப்பதிவு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் மற்றும் வாகன வரிகள் வருமானம் இந்த வருடம் மே மாதத்தை விட ஜூன் மாதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.  தற்போது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்கள் விற்பனை கூடி உள்ளது.  ஆனால் வரும் மாதங்களில் வாகன விற்பனைகள் குறையும் என்பதால் இந்த வாகன விற்பனை வரி இந்த அளவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது தமிழக அரசுக்குச் சற்றே ஆறுதல் அளிப்பது மத்திய அரசு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டில் ரூ.4600 கோடியை இரு தவணைகளாக வழங்கியது ஆகும்.