நீட் தேர்வு கேள்விகளில் 97% தமிழக அரசு பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன

சென்னை

ந்த வருடம் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97% கேள்விகள் தமிழக அரசு பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது என்னும் எண்ணம் பொதுவாக நிலவி வருகிறது.   இதற்கு அரசு கல்வித் திட்டம் நீட் தேர்வு அளவுக்கு இல்லை என கூறப்பட்டு வந்தது.    இதனால் தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் பெருமளவில் சேரும் நிலை உண்டானது.    மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்வதில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடப்புத்தகங்களை அறிமுகம் செய்தது.   இந்த புத்தகங்கள் 11 ஆம் வகுப்புக்கு 2018-19 ஆம் ஆண்டில் இருந்தும் 12 ஆம் வகுப்புக்கு 2019-20 ஆ,ம் ஆண்டில் இருந்தும் நடைமுறைக்கு வந்துள்ளன.   தற்போது நீட் தேர்வு பலமுறை தள்ளி வைக்கப்பட்டுக் கடந்த ஞாயிறு அன்று நடந்துள்ளது.

இந்த நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ள 180 கேள்விகளில் 174 கேள்விகளுக்கான பதில்கள் தமிழக அரசின் புதிய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.   கடந்த 2017 ஆம் வருடம் 60% மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் இது ஒரு நல்ல முன்னேற்றம் எனக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மாணவன் தனது பாடப்புத்தகங்களைச் சரியாகப் படித்தாலே 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும் எனக் கூறி உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியை ரீடா ஜான்,  ”நடந்து முடிந்த நீட் தேர்வில் பிசிக்ஸ் பாடத்தில் 99% கேள்விகள் மற்றும் பயாலஜியில் 90 ல் 87 கேள்விகள் கெமிஸ்டிரியில் 45 கேள்விகளில் 43 எனத் தமிழக பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இதனால் தமிழக பாடத்திட்டம் சி பி எஸ் இ க்கு எவ்விதத்திலும் குறைந்தது என மாணவர்கள் எண்ண வேண்டாம்” எனக் கூறி உள்ளார்.