கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 1000 படுக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : சென்னை கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200 பேருக்கு ஆக்சிஜன் விநியோகம் கொடுக்கப்படும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

கிண்டி சோதனை மையத்தில் தினமும் 1,500 கொரோனா பரிசோதனைகள் நடத்த இயலும். சிகிச்சை அளிக்க எம்டி, எம்எஸ் முடித்த  81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, சென்னை போர்ட் டிரஸ்ட் மருத்துவமனை மற்றும் எழும்பூர் கண் மருத்துவமனை ஆகியவை தலா 300 படுக்கைகள் வரும் நாட்களில் வரும்.

88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. stop corona என்ற இணயத்தளத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரங்களை அறியலாம். stop corona என்ற இணயத்தளத்தில் மேலும் பல தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகள் வழங்க முன்வந்துள்ளன. நோயாளிகள் புதிய ஹெல்ப்லைன் எண் 044-4006 7108 பயன்படுத்தி அழைக்கலாம். சென்னையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம்என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், சென்னை கார்ப்பரேஷனில் 10,000 படுக்கை வசதிகள் உள்ளன. அவை நகரத்தின் 4 பெரிய அரசு மருத்துவமனைகளின் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தலா 3000 படுக்கைகள் ராஜிவ்காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அதே சமயம் கேஎம்.சி.க்கு சுமார் 2,000 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.