பணியாளர்கள் பாதுகாப்புக்காக 80 அரசு மருத்துவமனைகளில் ஹாட்லைன் போன்

சென்னை

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்புக்காக ஹாட்லைன் தொலைபேசி வசதியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்

பொதுமக்களுக்கு அவசரக்கால சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் உறுதி செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் பல அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பகுதியில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் சில நேரங்களில் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதையொட்டி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில்  பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இவ்வாறான சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்திலும், மருத்துவப் பணியாளா்களின் அச்சமின்றி பணியாற்றும் வகையிலும், மருத்துவமனைக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தை நேரடியாக இணைக்க பிரத்யேக ஹாட்லைன் தொலைபேசி நிறுவப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

முதல் கட்டமாக மாநில அளவில் 80 அரசு மருத்துவமனைகளில் இந்த வசதியை நிறுவ முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த வசதியைச் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காணொலி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹாட்லைன் வசதியைத் தொடங்கி வைத்தார். அதில் திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் தயாளன், அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் சேகர், டாக்டா் விஜயசேகா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்தகைய ஹாட்லைன் வசதி மூலம் மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அங்கிருந்து சென்னை காவல் துறை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க முடியும். விரைவில் மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இவ்வசதியை தொடங்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.