தமிழகம் : இன்று 2 ஆம் நாளாகத் தொடரும் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்

சென்னை

ன்று தமிழகத்தில் 2 ஆம் நாளாகப் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 14 ஆம் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை நடத்தி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.  மேலும் பல பணிமனைகளில் பல நாட்களாக நிரப்பாமல் உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசு அதற்கு ஒப்புதல் அளிக்காததால் நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர்.  இன்று இரண்டாம் நாளாக வேலை நிறுத்தம் தொடரப்படுகிறது.  இதையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு மிகவும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் ஓடும் மாநகர பேருந்துகளில் தற்போது 50% க்கும் குறைவன பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.  அரசு பேருந்துகளை நம்பி உள்ள சென்னை நகர மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று மின்சார ரயில் கம்பி அறுந்ததால் மக்கள் மேலும் அவதிக்குள்ளாகினர்.