சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பருவ மழை பெய்து  வருகிறது. குறிப்பாகச் சென்னை வாசிகள் இதனால் பெரும் மன மகிழ்வு அடைந்துள்ளனர். கடும் தண்ணீர் பஞ்சத்தில் அவதியுறும் சென்னைக்கு மழை பெய்வதில் தண்ணீர் பஞ்சம் தீர வழி பிறந்துள்ளது எனவே கூறலாம். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும். காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலையில்  இருந்தே சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் பல இடங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உண்டு. அதிக பட்ச வெப்பநிலையாக 34 டிகிரி வெப்பமும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிக அளவு மழை பெய்துள்ள இடங்கள்

வேலூர் – 17 செ.மீ
கடலூர் – 13 செ.மீ
அரியலூர் – 12 செ.மீ
போலூர் – 11 செ.மீ
விழுப்புரம் – 10 செ.மீ
குடவாசல் – 9 செ.மீ
தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளில் 8 செ.மீ.
பண்ருட்டி (கடலூர்), திருவாடானை (ராமநாதபுரம்), செந்துறை (அரியலூர்), திருவாரூர் ஆகிய பகுதிகளில் 7  செ மீ மழையும் பெய்துள்ளன.