சென்னை:

திமுகவில் தினந்தோறும் நாற்காலி யுத்தம் நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. தற்போது சசிகலா அணியான அதிமுக அம்மா அணி 5 அணிகளாக சிதறுண்டு உள்ளது. இதன் காரணமாக அந்த அணியில் நாற்காலி யுத்தம் நடைபெற்று வருகிறது.

ஆளுக்கு ஒரு அறிக்கை விட்டும், செய்தியாளர்களிடம் பேசியும் பரபரப்பு தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரலாறு காணாத வறட்சியின் காரணமாகவும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், காவிரி டெல்டாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்கொலை சாவுகள் இருநூறுக்கும் மேல் சென்று கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 2011-12ல் 12.5 சதவீதமாக இருந்தது, 2016-17ல் 1.64 சதவீதமாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே ஆண்டில் அண்டை மாநிலங்களான ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி 10.36 சதவீதமாகவும், தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி 7.1 சதவீதமாக உயர்ந்து வருகிறது.

ஆந்திர மாநில பிரிவினையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக் கொண்டு, தங்கள் மாநிலத்தை அந்தந்த மாநில முதலமைச்சர்கள் வளர்ச்சிப் பாதையில் அழைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். இதனால் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டியவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.26 ஆயிரத்து 615 கோடி முதலீடு தான் வந்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கூறியிருக்கிறார். ஆக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாண வேடிக்கையாக நடத்தப்பட்டு இன்றைக்கு புஸ்வாணமாக மாறியிருக்கிறது. இதற்கான பொறுப்பை இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தான் ஏற்க வேண்டும்.

தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்ற அழிக்க முடியாத களங்கத்தை பெற்றிருக்கிறது. அக்கட்சிக்கு யார் தலைவர்? ஆட்சிக்கு யார் முதல்வர்? என்கிற நாற்காலி யுத்தம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மோதல்கள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.