சென்னை: நாளை விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில பிரிவு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி நாளை  தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் பெருந்திரளாக காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும்.

எதிர்கட்சிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு சர்வாதிகாரமான முறையில் விவசாயிகளின் மீது திணித்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டம் ஓயாது என்று அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறார்கள்.

டெல்லியில் டிசம்பர் மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 18 நாள் போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி கவலைப்படாமல் சமூக விலகலை புறக்கணித்து வாழ்வா, சாவா என்ற நிலையில் போராடிக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு எழுந்திருக்கிறது என்ற அளவில் நாளைய போராட்டம் அமைய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.