சென்னை: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: சுதந்திர இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கி வந்த அனைத்து ஆயுள் காப்பீட்டுத் தொழிலும் முன்னாள் பிரதமர் நேரு எடுத்த பெரு முயற்சியால் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அந்நிய கம்பெனிகளின் வணிகம் இதில் அடக்கம். அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் ஆயுள் காப்பீட்டுக் கழகம் செயல்படத் தொடங்கியது.

மக்களுக்குப் பாதுகாப்பு எண்ணமும், சேமிப்புப் பழக்கமும் வளர இந்தத் துறை பெரும் உதவியாக இருந்தது. மக்களின் சேமிப்புப் பணம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட்டது. குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கும், மத்திய தர வர்க்கத்தினருக்கும் பயன்படும் பல சேமிப்புத் திட்டங்களை ஆயுள் காப்பீட்டுத் துறை சிறப்பாகச் செய்து வருகிறது.

ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாகச் செய்வதற்கு காப்பீட்டுத் துறை கணிசமான அளவுக்கு நிதியுதவி செய்திருக்கிறது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க தற்காலிகக் கடன் கொடுத்து இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. தேசிய காப்பீட்டுக் கழகத்தை நாட்டுடமை ஆக்கியதன் பலனை கடந்த 65 ஆண்டுகளாக நமது நாடு அனுபவித்து வருகிறது.

இந் நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எல்.ஐ.சி பங்கு விற்பனையை அரசு முன் மொழிந்துள்ள சூழலில் எல்.ஐ.சி தொடங்கிய நாள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அரசின் முடிவு, தேசப் பொருளாதாரத்திற்கோ, இன்சூரன்ஸ் துறையின் எதிர்காலத்திற்கோ நல்லதல்ல.

200 ஆண்டு கால இன்சூரன்ஸ் துறை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது இந்த 64 ஆண்டுகள் மட்டுமே அது தேசம், மக்கள் நலன் என்ற நோக்கோடு செயல்பட்டு வந்துள்ளது. விடுதலை இந்தியாவிலும் சில ஆண்டுகள் அந்நிய, தனியார் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.

அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் ஆகியோர் எல்.ஐ.சியின் இலக்குகளை அறிவித்தனர். அவற்றில் முக்கியமான மூன்று. காப்பீட்டு பாதுகாப்பு மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட வேண்டும், இன்சூரன்ஸ் துறையின் மிக முக்கியமான நோக்கமான நுகர்வோருக்கான வாக்குறுதியை தவறாது நிறைவேற்றுவது, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என தேச நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகியவை ஆகும்.

64 ஆண்டு பயணம் முடிவடையும் தருவாய் இது. எந்த இலக்குகளுக்காக எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதோ அதை இக்காலத்தில் சிறப்பாக ஈடேற்றியுள்ளது. இருந்தாலும் 1999-ல் இருந்து மீண்டும் அந்நியர், தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டன.

இப்போது களத்தில் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எல்.ஐ.சியின் செயல்பாடுகள் எந்த வகையிலும் தனியார் நிறுவனங்களுக்கு மேம்பட்டதாகவே உள்ளன. இதோ அதன் செயல்பாட்டுக்கான ஆதாரங்கள்.

எல்.ஐ.சி 42 கோடி பாலிசிகளைக் கொண்டிருக்கிற உலகத்தின் தனிப்பெரும் நிறுவனமாக உள்ளது. இந்தியா தவிர்த்து சீனா மக்கள்தொகை மட்டுமே இந்த பாலிசிகளின் எண்ணிக்கையை விட அதிகம். 1956-ல் அரசின் ரூ.5 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதன் பின் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை.

2011-ல் சட்ட நியதிகளுக்காக ரூ.100 கோடிகளாக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த ரூ.100 கோடி முதலீட்டுக்கு அரசுக்குக் கடந்த ஆண்டு கிடைத்துள்ள டிவிடெண்ட் மட்டுமே ரூ.2,600 கோடிகள். வரிகளாக சுமார் ரூ.10 ஆயிரம் கோடிகள். ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திற்கும் பல லட்சம் கோடி ரூபாய்கள்.

நடப்பு 13வது திட்ட காலத்தின் முதலாண்டில் மட்டும் ரூபாய் 7 லட்சம் கோடிகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள் ஆகும். ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற ஆதாரத் தொழில்களுக்காக பல்லாயிரம் கோடிகளை எல்.ஐ.சி நிதியாதாரங்களாக வழங்கி வருகிறது.

வழக்கமாக 25 ஆண்டுகளாக அரசு நிறுவனங்களின் தனியார்மயத்திற்கு முன் வைக்கப்பட்டு வரும் நஷ்டம், திறமையின்மை, நுகர்வோர் தெரிவு, வணிகப் பரவல் ஆகிய நான்கு காரணங்களுமே பொருந்தாது. ஆகவே, பங்குச் சந்தையின் சில்லறை முதலீட்டாளர்களின் நலன், பங்குச் சந்தையின் செபி போன்ற அமைப்புகளின் கண்காணிப்பால் வெளிப்படைத் தன்மை போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஆனால், இவையும் உண்மையான காரணங்கள் இல்லை. சில்லறை முதலீட்டாளர்கள் கைகளில் உள்ள பங்குகள் விரைவில் நிறுவன முதலீட்டாளர்கள் கைகளுக்குப் போய் விடும் என்பதே ஏற்கெனவே பங்கு விற்பனைக்கு ஆளான அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனுபவம். ‘செபி’ கண்காணிப்பை மீறி அடுத்தடுத்து எவ்வளவு மோசடிகள் பங்குச் சந்தையில் நடந்திருக்கிறது என்பதற்கும் நிறைய அனுபவங்கள் உள்ளன.

எனவே, மத்திய பாஜக அரசு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் முதுகெலும்பாக விளங்குகிற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இந்த முடிவு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மீது இருக்கிற நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும். மக்கள் சேவையில் மகத்தான பணி செய்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் முயற்சியை முறியடித்து ஆயுள் காப்பீட்டுக் கழகத்தைக் காப்பாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.