சென்னை: மின் கட்டணம் வசூலிக்காத காரணத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் ரூ.2,000 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

மார்ச் 24 நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதையடுத்து, மார்ச் 25 முதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், அபராதம் இல்லாமல் ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணத்தை செலுத்துவதற்கு மின் வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் போன்றவை செயல்படாததால், தினமும் 10 கோடி யூனிட்கள் வரை மின்சார விற்பனையும் பாதித்துள்ளது. இதனால் செலவுகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து குறுகிய கால கடனாக, ரூ.2,000 கோடி வாங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.