சென்னை

போக்குவரத்து துறை ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நான்கு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.   இதை கண்டித்த உயர்நீதிமன்றம் உடனடியாக அவர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது.   ஆயினும் ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்ந்து வருகிறது.   ஊழியர்கள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது.

தற்போது மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.   தமிழக மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளது.   அரசு இதற்கு ஏதும் பதில் அளிக்கவில்லை.   இதையொட்டி ஊழியர் மத்திய அமைப்பு மின் வாரியத்துக்கு ஒரு அறிவிப்பை அளித்துள்ளது.

அந்த அறிவிப்பில் வரும் 23ஆம் தேதி காலை 6 மணி முதல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தம் நடத்தப் போவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சிஐடியு தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அளித்துள்ள இந்த அறிவிப்பு மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.