சென்னை: மின் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

இளநிலை உதவியாளர் பணியில் 500, மின் கணக்கீட்டாளர் பதவியில் 1,300 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்தது தமிழக மின்சார வாரியம். இந்தத் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள், ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வர்கள், ‘தமிழக மின்சார வாரிய பணிகளுக்கு தமிழில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஆங்கிலத்துடன் சேர்த்து தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரிய பணியமைப்பு பிரிவின் தலைமைப் பொறியாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, தமிழ் வழியில் படித்தவர்களின் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களின் நலன் கருதி தமிழ் மொழியிலும் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம், மார்ச் 23ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in என்ற வலைதளம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழில் நடத்தப்பட்டு வந்த தேர்வு, யாரை திருப்தி செய்வதற்காக இப்போது ஆங்கிலத்திலும் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.