மழைக்காலம் : பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை
சென்னை
தமிழ்நாட்டில் மழைக்காலம் வர உள்ளதை ஒட்டி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
இன்னும் ஒரு சில தினங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மழைக்காலங்களில் மின்சாரத்தினால் பல விபத்துக்கள் ஏற்படுவதால் உயிரிழப்பு நிகழ்வது தொடர்ந்து வருகிறது. அதை ஒட்டி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் இந்த சமயட்தில் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதங்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நவடிக்கையை பொதுமக்கள் எடுக்க வேண்டும்.
அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டும் மின்சார வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சாதனங்களில் ஐஎஸ்ஐ சான்று உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மின் கம்பங்களின் மீது கொடி கட்டி துணி காயப்போடக் கூடாது. மற்றும் அந்த இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது.
மின் கம்பங்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள் போன்றவைகளின் அருகே மழைக்காலங்களின் போது செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகள் அருகே செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாக மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டும். இடி மின்னல் சமயத்தில் மின் கம்பங்கள், மரங்கள் ஆகியவைகளின் கிழே நிற்கக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.