சென்னை,

மிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 13ந்தேதி முதல் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அரசு பதவியான தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்ற நடைபெறும் நேர்காணல் நட்சத்திர விடுதியில் நடைபெற்றால், விடுதி முன் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உதவிப் பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வ தற்கான நேர் காணல் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரும் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தார்மீக நெறி முறைகளுக்கு எதிரான, ஊழலுக்கு வழிவகுக்கக் கூடிய தமிழ்நாடு மின்வாரியத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

மின்சாரவாரியத்திற்கு 300 மின்னியல் உதவிப் பொறியாளர்கள், 25 எந்திரவியல் உதவி பொறி யாளர்கள், 50 சிவில் உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 375 உதவிப் பொறியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 28.12.2015 அன்று வெளியிடப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 31.01.2016 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் தகுதி காண் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வரும் 13ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுனர் பதவிக்கான நேர்காணல் கூட சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் தான் நடந்ததே தவிர, நட்சத்திர விடுதியில் அல்ல.

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் நேர்காணல் நடத்துவதற்கான அறையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அங்கு நேர்காணல் நடை பெறும் என்று அறிவித்திருந்தால், அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும்.

ஆனால், அதைவிடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் நேர் காணலை நடத்துவதன் நோக்கம் தரகர்கள் தடையின்றி நடமாடவும், நேர் காணலுக்கு வருபவர்களிடம் அந்த இடத்திலேயே பேரம் பேசுவதற்கும் வசதி செய்து தருவது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடை பெறப்போகிறது என்பதற்கு இது தான் சிறந்த ஆதாரம் ஆகும்.

அதிக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பைச் சந்தித்து வருகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க கடந்த 5 ஆண்டுகளில் இரு முறை மின்கட்டணங்களை மின்சார வாரியம் உயர்த்தியிருக்கிறது. மின் திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லாமல் தடுமாறும் சூழலில் தனியார் நட்சத்திர விடுதியில் நேர் காணல் நடத்துவது ஏற்று கொள்ள முடியாத ஊதாரித்தனமாகும்.

எனவே, நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின் வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற வேண்டும்.

இதை செய்யத் தவறினால், வரும் 13ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவிருக்கும் சென்னை அரும்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.