தமிழக மின் வாரியம் : ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் தொடக்கம்

--

சென்னை

ரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தமிழக மின்வாரியம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழக மின் வாரியம் தற்போது வீடுகள் மற்றும் கடைகளில் மின் பயன்பாட்டை ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறது.  இதற்காக ஸ்டேடிக் மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.   இவ்வாறு மின் பயன்பாட்டை ஊழியர்கள் மூலம் கணக்கெடுப்பதில் பலமுறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி மத்திய அரசு அனைத்து மாநில மின்வாரியங்களையும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அறிவுறுத்தியது.

இவ்வாறு பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர்கள் மாநில மின் வாரிய கணினி சர்வர்களுடன் தொலைத் தொடர்பு மூலம் இணைக்கப்படும்.   மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டிய தேதி அன்று தானாகவே கணக்கு எடுக்கப்பட்டு இந்த தகவல் நுகர்வோருக்கு எஸ் எம் எஸ் மூஅல்ம் அனுப்பப்படும்.   இது தானாகவே எடுக்கும் கணக்கெடுப்பு என்பதால் முறைகேடுகள் ஏதும் இருக்காது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இந்த திட்டத்தை ரூ.4300 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.    இத்திட்டம் சோதனை ரீதியாகச் சென்னை தியாகராய நகர்ப் பகுதியில் தொடங்கப்பட்டது.  கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இப்பணி முழுவதுமாக முடங்கிப் போனது.

தற்போது மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு விதிகளைச் சிறிது சிறிதாகத் தளர்த்தி வருகின்றன.  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல பணிகளை அரசு மீண்டும் தொடங்கி உள்ளது.  அந்த வகையில் தமிழக மின் வாரியம் மீண்டும் ஸ்மார்ட் மீட்டர்கள் தொடங்கும் பணியைத் தொடங்கி உள்ளது.  இந்த பகுதி செயல்பாட்டைப் பொறுத்து மற்ற இடங்களில் பணி விரிவு படுத்தப்பட உள்ளது.