தமிழ்நாடு : மின் இணைப்பு கட்டணம் கடுமையாக உயர்கிறது

சென்னை

புதிய மின் இணைப்பு கட்டணத்தை தமிழக அரசு 5 மடங்கு உயர்த்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழக மின் வாரியம் 3 கோடி மின் இணைப்புகள் அளித்துள்ளது.   தற்போது 2.2 கோடி வீட்டு மின் இணப்புகள், 11 லட்சம் குடிசை (ஒரு விளக்கு) மின் இணைப்புகள், மற்றும் 33 லட்சம் வர்த்தக இணைப்புக்கள் உள்ளன.  வர்த்தக இணைப்புக்களில் தொழிற்சாலை இணைப்புகளும் அடங்கும்.

மின் இணைப்பு தாரர்களுக்கு மின்கட்டணம் இது வரை பல முறை உயர்த்தப்பட்டுள்ளது.    புதிய மின் இணைப்புக் கட்டணம் கடந்த 1999 ஆம் வருடத்துக்குப் பின் உயர்த்தப் படவில்லை.    அந்தக் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சென்னை நகரில் தற்போது வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு அளிக்க ரூ.1600 கட்டணம் வசூலிக்கப் படுகிறது.   இந்தக் கட்டணம் 9800 ஆக உயர்த்தப்பட உள்ளது.   தற்போது மும்முனை மின் இணைப்புக் கட்டணம் ரூ.7475 ஆக உள்ளது.   இது ரூ. 35000 ஆக உயர்த்தப்பட உள்ளது.  அத்துடன் கிராமப் புற மும்முனை இணைப்புக் கட்டணம் 18 ஆயிரமாக மாற்றப்பட உள்ளது.    அது மட்டுமின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கும் மின் இணைப்புக் கட்டணம் உயர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

காசோலைகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் காசோலை திரும்பி வந்தால் வசூல் செய்யப்படும் அபராதமும்,  துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வசூலிக்கப்படும் அபராதமும் உயர்த்தப்பட உள்ளது.

இந்த கட்டண உயர்வு குறித்த மசோதா தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.   ஆணையம் இதை பரிசீலைனை செய்தபின் தனது முடிவை தெரிவிக்கும் என கூறப்படுகிறது.   ஆணையம் ஒப்புதல் அளித்த பின் உயர்த்த்பட்ட கட்டணங்கள் குறித்து அறிவிக்கப்படக் கூடும்.