சரவணன் பார்த்தசாரதி
கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஓரிரு மாதங்களாக மின்சாரப் பயன்பாட்டிற்கான அளவீடுகள் எடுக்கப்படவில்லை. ஆகவே ஜனவரி மாத பயன்பாட்டையே மார்ச் மாதப் பயன்பாடாக எடுத்துக்கொண்டு பணம் வசூலித்தது TNEB. அதேபோல் பிப்ரவரி மாத பயன்பாட்டை ஏப்ரலுக்கானதாக எடுத்துக்கொண்டனர். இதை, PMC – Previous month consumption என்று குறிப்பிட்டனர். நாமும் இதற்கான பணத்தைச் செலுத்திவிட்டோம்.
இப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இந்த மாதம் EB reading எடுக்கும்போது ஜனவரி மாதத்தில் எடுத்த ரீடிங்கில் இருந்து கணக்கிட்டு எவ்வளவு பணம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இடையில் அவர்கள் எடுத்த PMC reading-கை, அதற்கு நாம் செலுத்திய பணத்தைக் கணக்கில் கொள்ளவே இல்லை.
சென்னையில் இருக்கும் பலரிடமும் கேட்டபோது அவர்களுக்கும் இதேதான் நடந்துள்ளது. தமிழகம் முழுக்கவே இப்படித்தான் நடந்திருக்கும் என்று கருதுகிறேன். இணையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இதைக் கண்டறியமுடியும். மற்றவர்கள் இப்படி ஒன்று நடந்திருப்பதை அறிவதற்கான வாய்ப்புகள் குறைவு. கோடை காலம் என்பதால் அதிகக் கட்டணம் வந்துள்ளது என்று எடுத்துக்கொண்டு பணம் செலுத்திவிடுவார்கள். சில நூறு கோடிகள் இப்படி மக்களிடம் அநியாயமாக வசூலிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.
மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மீடியா எடுத்துச்சென்றால் லட்சக்கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இயலும். அரசும், மின்வாரியமும் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
உங்களுடைய EB reading-கை உடனடியாகப் பார்க்கவும்.