சென்னை : குரூப் 4 பணிக்காக கூடுதலாக 484 காலிப் பணியிடங்களை ஒதுக்கி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டு இருப்பதாவது: 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

தேர்வில் பங்கேற்ற தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் நவம்பரில்  வெளியிடப்பட்டு, தற்காலிகமாக தகுதி பெற்ற தேர்வர்கள் டிசம்பர் 18ம் தேதி வரை இ-சேவை மையமங்கள் மூலமாக சான்றிதழ் பதிவேற்றும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட காலிப்பணி இடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆயிரத்து 907 கூடுதல் காலிப்பணியிடக்களையும் சேர்த்து மொத்தம் 9 ஆயிரத்து 398 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில், தற்போது கூடுதலாக 484 காலிப் பணியிடங்களும் பெறப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.