சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், சரணடைந்த இடைத்தரகர்  ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப்2ஏ தேர்வு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் தனிப்படை போலீசார் குழுக்களாக சென்று தேடி வந்தனர். தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததால், சென்னை சைதை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் நேற்று சரண் அடைந்தார்.

சரண் அடைந்த ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நேற்றே மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதற்காக முற்பகல் 11.50 மணி அளவில் ஜெயக்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரை காவலில் எடுக்க அனுமதி கேட்டனர்.

அப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு செல்ல சம்மதமா என ஜெயக்குமாரிடம் நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், நான் தவறு செய்யவில்லை என்று கூறி, கண்ணீர் விட்டு அழுதார்.

அதன்பின்னர் சிபிசிஐடி மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிடடார். இதையடுத்து, ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.