தீபாவளிப் பண்டிகையையொட்டி அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநா் ஆா். பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 24, 25, 26 ஆகிய நாட்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய இடங்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்கப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அக். 24, 25, 26 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், திருவையாறு தடப்பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன. இதேபோன்று கரூா், திருச்சி, அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீா்காழி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய தடப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

தீபாவளி முடிந்து பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்குச் செல்லும் வகையில் அக்டோபர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.