சென்னை: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை உருவாகாமல் தடுக்க, கட்டுப்பாட்டுடனான தீபாவளி கொண்டாட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு விகிதம் 3.5 சதவிகிதமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளிலும்,  அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட நாள்தோறும் 5 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகிறது.

சிறப்பு சிகிச்சைகளை தமிழக அரசு வழங்குவதால், பலி எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பரிசோதனை முடிவு வர 3 முதல் 5 நாள்கள் வரை ஆகிறது. ஆனால் தமிழகத்தில் 10 மணி நேரத்தில் பரிசோதனைகள் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் என 10 லட்சம் பேரிடம் இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது ஏற்படும் ஒன்று கூடுதல் நிகழ்வால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்கும் வகையில் 2வது அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.