கொரோனா அச்சுறுத்தல் : நான்கு வாரங்களுக்கு முழு அடைப்பு கோரும் ப சிதம்பரம்

டில்லி

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நான்கு வாரங்கள் வரை முழு அடைப்பு நடத்த வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார்.

பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது.  இதுவரை நான்கு பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.  சுமார் 180 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ள தகவலின்படி இதுவரை இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் மக்களுக்கு மக்கள் பரவுதல் ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.   இதனால் அவ்வாறு பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில், “தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2 ஆம் நிலையில் உள்ளது.  இது மேலும் பரவாமல் தடுக்க நாட்டில் உள்ள அனைத்து நகரம் மற்றும் சிற்றூர்களை முழுவதுமாக 2 முதல் 4 வாரங்கள் வரை அடைக்க வேண்டும்” எனப் பதிவு இட்டுள்ளார்.