டில்லி

ழக்குகளைச் சீக்கிரம் முடிக்க உச்சநீதிமன்றத்தைப் பிரிக்க வேண்டும் எனத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நேற்று டில்லியில் மறைந்த மற்றும் பிரபல மத்தியஸ்தர் பி பி ராவ் எழுதிய கருத்துக்கள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது.  இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் மற்றும் பல முன்னாள் நீதிபதிகள் கலந்துக் கொண்டனர்.   இந்த விழாவில் வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

அப்போது வெங்கையா நாயுடு, “உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.   இவற்றை உடனடியாக முடிப்பது அவசியம் ஆகும்.    அதற்கான நடவடிக்கைகளை அவசியம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த வழக்குகளில் அரசியலமைப்பு சட்ட விவகாரம் மற்றும் மேல் முறையீடு எனப் பல வழக்குகள் உள்ளன.

அது மட்டுமின்றி நாடெங்கும் இருந்து பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.   எனவே இந்த வழக்குகளை விரைவில் முடிக்க உச்சநீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்.  ஒரு பிரிவு அரசியலமைப்பு சட்ட வழக்குகளையும் மற்றொரு பிரிவு மேல் முறையீட்டு வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்.

அது மட்டுமின்றி நாட்டின் நான்கு பகுதிகளிலும் உச்சநீதிமன்றக் கிளைகள் திறக்கப்பட வேண்டும்.   இந்த கிளைகளின் வடக்குப் பகுதி டில்லி நகரிலும், தெற்குப்பகுதி சென்னை அல்லது ஐதராபாத் நகரிலும் கிழக்குப் பகுதி கொல்கத்தாவிலும்  மேற்குப் பகுதி மும்பையிலும் அமைக்கலாம் “ எனக் கூறி உள்ளார்.

ஏற்கனவே இது குறித்து பாராளுமன்ற சட்டக் குழு அளித்த இதே யோசனையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.