5ஜி இணைய சேவையை 84 பில்லியன் டாலருக்கு ஏலம் எடுப்பதில் 3 நிறுவனங்கள் மத்தியில் குழப்பம்

மும்பை:

5ஜி இணைய சேவையை 84 பில்லியன் டாலருக்கு ஏலம் எடுப்பதில், 3 முக்கிய தொலை தொடர்பு நிறுவனங்கள் குழப்பத்தில் உள்ளன.

5ஜி இணைய சேவையை ஏலம் எடுப்பதில் உலக அளவில் பில்லியனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.


புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி இணைய சேவையை இந்தியாவில் 84 பில்லியன் டாலருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகைக்கு ஏலம் எடுக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் முகேஷ் அம்பானி உட்பட முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களையும் யோசிக்க வைத்துள்ளது.

5ஜி வேகம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்த பயனாளர்களின் அனுபவத்தை பொருத்தே ஏலம் எடுப்பது குறித்து தொலை தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்யும் என தெரிகிறது.

மேலும் 5ஜி சேவையால் டிஜிட்டல் பொருளாதாரம் அடையும் பலனின் அடிப்படையிலும், ஏலம் எடுப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று தெரிகிறது.

பாரத் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் 5 ஜி சேவையை ஏலம் எடுப்பது குறித்து எந்த முடிவும் எட்டவில்லை.

அதேபோல், ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுப்பது குறித்து எந்த கருத்தையும் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தெரிவிக்க மறுத்துவிட்டது.

5ஜி சேவை கார்களிலும், ஆளில்லா விமானங்களிலும், நகரம் முதல் கிராமங்கள் வரை பயன்படுத்த முடியும்.
5ஜி மருத்துவத் துறை, கல்வித் துறையிலும் முக்கிய பங்கு வகிக்கும் என தொலைத் தொடர்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசியாவின் பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை பரிசோதித்து வருகின்றனர்.

2020-ல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகிலேயே முதல்முறையாக தென் கொரியாவின் எஸ்கே டெலிகாம் 5ஜி இணைய சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில் 3 முக்கிய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சீனா 5ஜி இணைய உரிமம் அளித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, 5ஜி இணைய சேவைக்கு முதலீடு செய்வது சவாலாக உள்ளது.
கடன் பெற்றே இந்த சேவையை ஏலம் எடுக்க வேண்டியிருப்பதால், இந்தியாவின் முக்கிய 3 தொலை தொடர்பு நிறுவனங்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.