நண்பனை சூட்கேசில் பார்சல் .. அசரவே அசராத அபார்ட்மெண்ட்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘கிரைம்’ சம்மந்தப்பட்ட செய்திகளைப் படிப்பதில் மிக்க ஆர்வம் உள்ளவர்.

தானே ஒரு நாள், பத்திரிகையில் செய்தியாக வருவோம் என்று அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் செய்தியாகி விட்டார்.

மங்களூருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அந்த இளைஞர் வசித்து வருகிறார்.

தன் நண்பன் ஒருவனை, நேற்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

குடியிருப்பு வாசிகள், நண்பனை உள்ளே விட அனுமதிக்கவில்லை.

‘’தம்பி.. ஊரடங்கு பத்தி உனக்குத் தெரியும். உன் நண்பனைக் குடியிருப்புக்குள் விட மாட்டோம்’’ என்று திட்டவட்டமாகக் கூறி விட்டனர்.

எவ்வளவோ  வாக்குவாதம் செய்தும், அவர் பேச்சை யாரும் கேட்பதாக இல்லை.

கோபத்துடன் அங்கிருந்து சென்றவர், சிறிது நேரம் கழித்து  ஸ்கூட்டரில் பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் அங்கு வந்துள்ளார்.

அந்த சூட்கேசை, தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டார்.

இதைக் கவனித்த காவலாளிக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவரும் கிரைம் செய்தி வாசகராக இருக்க வேண்டும்.

அந்த இளைஞர் ,சூட்கேசில், சடலத்தை வைத்திருக்கலாம் என்று மிரண்டு போன காவலாளி-
கூப்பாடு போட்டுக் குடியிருப்பு வாசிகளைக் கூட்டி விட்டார்.

குடியிருப்பு வாசிகள் ஓடி வந்தார்கள்.

காவலாளி செய்தி சொன்னான்.

சூட்கேசை திறந்து பார்த்தால், உள்ளே மனித அசைவு.

இளைஞனின் நண்பன், உடம்பை சுருக்கி சூட்கேசில் படுத்திருந்தான்.

போலீசுக்குத் தகவல் போனது.

விரைந்து வந்தார்கள்.

விசாரித்தார்கள்.

இளைஞர், 17 வயது என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்