திருப்பூர்

கொரோனா பரவி வரும் இந்நேரத்தில் பாபா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய முத்திரையை பயன்படுத்த வேண்டும் எனத் திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மாநிலத்தின் பல இடங்களில் இன்று முதல் 3 – 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.  அதையொட்டி நேற்று காய்கறி, மளிகை, காய்கறிகள் வாங்க சமூக இடைவெளியைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூடினார்கள்.   இதன் மூலம் கொரோனா பரவுவது அதிகரிக்கலாம் என பலருக்கும் அச்சம் ஏற்படுத்தி உள்ளது

 

இந்நிலையில் திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் தனது டிவிட்டரில் ”மன்ற நிர்வாகிகளுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்.   கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவாமல் இருப்பதற்காக வெளியில் செல்லாமல் உள்ள நிர்வாகிகள் பாபா திரைப்படத்தில் உள்ளது போல் நீர் முத்திரையைச் செய்து மன அமைதியுடன் ஆராக்கியமாக இருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனப் பதிந்துள்ளது.

 

அத்துடன், “கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற  இரண்டு பஞ்சபூதங்களைச் சமன்செய்வதற்காகச் செய்யப்படும் முத்திரை இது. தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ செய்தால், கொரோனோ காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் நமக்கு மன அமைதியை இந்த முத்திரை தரும்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.