அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதா? திருநாவுக்கரசர்

சென்னை:

மிழக ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து பேசியதற்கு  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன்  எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்,  உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.

நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை.

நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப் பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.

தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.