திருவனந்தபுரம்

பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் கேரள தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்கப் பிரிவு காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் தெரிவித்திருந்தது.   ஆனால் அப்போது அக்கட்சியின் கேரளப் பிரிவு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.   அதன் பின்நடந்த திரிபுரா தேர்தலில் கம்யூனிஸ்ட் தோல்வி அடைந்ததது.

அதையொட்டி 2019ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கம்யூனிஸ்ட் உத்தேசித்து உள்ளது.   இதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி துவக்கி உள்ளது.   இந்நிலையில் கேரள கம்யூனிஸ்ட் பிரிவின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் கட்சியின் முடிவு குறித்து நேற்று ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன், “அடுத்தவருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இடது சாரி கூட்டணி சுமார் 100 -150 இடங்களில் போட்டியிட உள்ளது.  மீதமுள்ள இடங்களில் பாஜகவை தோற்கடிக்க உள்ள வேட்பாளர்களுக்கு கட்சியினர் வாக்களிப்பார்கள்.    அது சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளாக இருந்தாலும் சரி,  காங்கிரஸாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.   பாஜகவை தோற்கடிக்க நாங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க தயாராக உள்ளோம்” எனக் கூறி உள்ளார்.