மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தல்: மு.க.அழகிரி கையெழுத்து வேட்டை

மதுரை:

திமுகவில் மீண்டும் தன்னை சேர்க்க வலியுறுத்தி, திமுக தொண்டர்களிடம் கையழுத்து வேட்டையில் மு.க. அழகிரி இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 1 லட்சம்  திமுக தொண்டர்களிடம் கையெழுத்து வேட்டையை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

மு.க.அழகிரி

முன்னாள் மத்திய மந்திரியும்,  தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும்  இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டார்.

இதனால் கோபாவேசமடைந்த அழகில்,  அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற  தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிராக களமிறங்கி பரரப்பை ஏற்படுத்தினார். இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 7ந்தேதி  தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்தார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் தன்னை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கினார். இதுகுறித்து, கருணாநிதி குடும்பத்திலும் முட்டல் மோதல்கள் நடைபெற்றது.  இதுகுறித்த   மு.க.ஸ்டாலினும்,  அவரது குடும்பத்தினரும், தி.மு.க. மேலிட தலைவர்களும் விவாதித்தனர். ஆனாலும் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று ழுகூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் முடிசூட்டப்பட்டார். இதையடுத்து, கடந்த 5-ந்தேதி (செப்டம்பர்)   மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன்  கருணாநிதி நினைவிடத்திற்கு அமைதி பேரணி சென்று அஞ்சலி செலுத்தி தனது பலத்தை காட்டினார். ஆனால், திமுக தலைமை அசைந்துகொடுக்கவில்லை.

மு.க.அழகிரிக்கு தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவை கட்சி தலைமைக்கு எடுத்துக்காட்டுகின்ற வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின்  முக்கிய ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் தலைமையில் தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்களிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மு.க.அழகிரியின்  ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க. தொண்டர்களிடம் மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி  கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அந்த மனுவில் கையெழுத்திடும் திமுக  தொண்டர்களின் உறுப்பினர் அடையாள எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  சுமார் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து வேட்டை விரைவில் முடிவடையும் என்றும், பின்னர் அந்த மனுவை தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைக்க மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று திருவாரூர் சென்று கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அழகிரி, தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் நிச்சயம் கேட்பேன் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.