அதானிக்காக துறைமுக சட்டத்தை மாற்றிய மோடி அரசு : பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

டில்லி

பிரபல பத்திரிகையாளர் பரஞ்ஜோய் குகதகுர்தா மோடி அரசு அதானிக்காக துறைமுக சட்டத்தை தளர்த்தியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

புகழ்பெற்ற பத்திரிகையாளரான பரஞ்ஜோய் குகதகுர்தா ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், வர்ணனையாளர், ஆவணப் பட இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்ப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஆவார்.  இவர் கடந்த 1977 முதல் பத்திரிகையாளராக பணி புரிந்து வருகிறார்.   இவர் இந்தியா டுடே, பிசினெஸ் இந்தியா, பிசினெஸ் ஒர்ல்ட் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளார்.

இவர் சமீபத்தில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அந்த பேட்டியில், “இந்த வருடம் மே மாதம் 21ஆம் தேதி அன்று கப்பல் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.  அதில் முந்திரா துறைமுகத்தில் இருந்து கண்டெயினர்களுடன் உள்ள வெளிநாட்டுக் கப்பல்கள் இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கு இடையில் செல்ல தடை நீக்கப்பட்டது.   கண்டெயினர்களில் பொருட்கள் இருந்தாலும் அல்லது காலியாக இருந்தாலும் அவ்வாறு செல்லலாம் என கூறப்பட்டது.

தற்போது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் அரசுக் கப்பல் நிறுவனம் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுடன் கடும் போட்டியில் உள்ளது.  அதனால் வெளிநாட்டுக் கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து மற்றொரு துறைமுகம் செல்ல தடை இருந்தது.   அது தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காபொடேஜ் விதிகளை இந்திய அரசு மாற்றி உள்ளது.  காபொடேஜ் விதிகள் என்பது உள்நாட்டு துறைமுகங்களுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான விதி முறைகளாகும்.  இத்தகைய விதிமுறைகள் அமெரிக்கா மற்றும் சீனா உட்பட 90 நாடுகளில் உள்ளது.   இதன் மூலம் இந்தியக் கப்பல்கள் மட்டுமே இந்தியத் துறைமுகங்களுக்கு நடுவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் என்பது மாற்றப்பட்டு வெளிநாட்டுக் கப்பல்களுக்கு தற்போது உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய கப்பல்களை விட குறைந்த வாடகையில் ஏற்றிச் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன.  இந்த தடை நீக்கம் முந்திரா துறைமுகத்துக்கு அனுமதிக்கப்பட்டதன் ஒரே நோக்கம் அந்த துறைமுகம் அதானி குழுமத்தின் கீழ் உள்ளது மட்டுமே ஆகும்.    தற்போது வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய அரசு அனுமதி இன்றி முந்திரா துறைமுகத்துக்கு வரவும் முடியும்,  இங்கிருந்து செல்லவும் முடியும்.   இது அதானி குழுமத்துக்காக மாற்றி அமைக்கப்பட்ட விதி” என அவர் தெரிவித்துள்ளார்.