சமூக இடைவெளி : ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் 160 பேருக்கு மட்டுமே அனுமதி

--

சென்னை

மூக இடைவெளியை பின்பற்ற ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 160 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட  சேவையில் தற்போது வண்ணாரப்பேட்டை முதல் கோயம்பேடு வழியாக ஒரு பாதையும் அண்ணாசாலை வழியாக மற்றொரு பாதையும் இயங்கி வருகிறது.  சென்னை மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் உள்ளன. இவற்றில் ஒரு முறைக்கு மொத்தம் 1270 பயணிகள் வரை பயணம் செய்யும் திறன் கொண்டுள்ளது.

தற்போது ஊரடங்கு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட  அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.  ஊரடங்குக்கு பிறகு மீண்டும் சென்னை மெட்ரோ ரயில் தனது சேவையைத் தொடங்கும் போது சமூக இடைவெளி காரணமாக ஒரு முறைக்கு 160 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் 20 மீட்டர் நீளமும் 2.9 மீட்டர் அகலமும் கொண்ட 4 பெட்டிகள் உள்ளன.  இவற்றில் ஒவ்வொரு பெட்டியில் 40 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.  அதாவது  இருக்கைக்கு ஆறு பேர் வீதம் அமரக்கூடிய இருக்கைகளில்  தலா மூவரும் இருவர் அமரக்கூடிய இருக்கைகளில் தலா ஒருவரும அமர அனுமதிக்கப்படுவர்.

மொத்தமுள்ள பயணிகளுக்கு இது போதுமானதாக இருக்காது என்பதால்  மெட்ரோ ரயில் சேவை அடிக்கடி இயக்குவது குறித்து யோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.  தற்போது சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் நெரிசல் நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

”கூட்டத்தைப் பொறுத்து நெரிசல் நேரங்களில் மட்டும் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.   மெட்ரோ ரயில் 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கக் கூடிய அளவுக்கு உள்ள போதிலும் அவ்வாறு இயக்க மொத்தம் 55 ரயில்கள் தேவைப்படும்.” என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You may have missed