கவர்னர் ராவ் – ஸ்டாலின் (பைல் படம்)

சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார்.

அப்போது எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க வற்புறுத்துவார் என தெரிகிறது.

எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி பெரும்பான்மை நிரூபிக்க நடைபெற்ற  கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, ஆங்கில தொலைக்காட்சியில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக உள்பட எதிர்க்கட்சியினர்  வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சபாநாயகர் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை ஆளுநரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி, ஆட்சியை கலைக்க கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.