சென்னை

பொய்யான தகவலைப் பரப்பியதற்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை அமைச்சர் வேலுமணி அறிமுகம் செய்தார்.  அப்போது இந்த திட்டம் மக்களுக்கு உகந்த திட்டம் அல்ல எனவும் இதனால் பல வித நோய்கள் பரவும்  எனவும் கோவையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பரப்பினார்.

இந்த பதிவுகள் குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் உகார் அளித்தனர்.  அதன் அடிப்படையில் ஜாகிர் உசேன் மீது மக்களைத் தவறாக வழி நடத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.   கடந்த 10 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

ஜாகீர் உசேனின் ஜாமீன் மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணையின் போது ஜாகிர் உசேன் தரப்பில்தமக்கு வந்த தகவலை ஃபார்வேர்ட் செய்ததாகவும் இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அரசு சார்பில் இந்த தகவல் தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் களங்கம் ஏற்படுத்தப் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது.

நீதிபதி சேஷசாயி, “நான் பேச்சுரிமைக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தினால் எனது வாக்கை முதலில் அளிப்பேன். அதே வேளையில் பொறுப்பற்ற வதந்திகளை பரப்புவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.    மனுதாரர் பரப்பிய ஆதாரமற்ற தகவல்களால் மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.  தமிழ்நாட்டில் தற்போது இது போல வதந்திகளைப் பரப்புவது மிகக் கொடிய மாசாக உள்ளது.

எவ்வித தார்மீக தகுதியோ பொறுப்போ இல்லாதவர்களால்  சமூக வலைத் தளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன.   இந்த வழக்கில் மனுதாரர் ஜாகிர் உசேன் தாம் ஆதாரம் இல்லாமல் தகவலைப் பரப்பியதை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.  அதற்குச் சம்மதித்தால் அவருக்கு ஜாமீன் வழங்குவது பற்றி  நீதிமன்றம் பரிசீலிக்கும்” எனக் கூறி உள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.