தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில், காவல்துறை கஸ்டடியில் மரணமடைந்த தந்தை-மகன் விஷயம், ஒருவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால், உத்திரப்பிரதேசத்தில் விகாஸ் துபே என்ற நபர், போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது வேறொரு விதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதாவது, முதலாவது விஷயம், காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரம் குறித்தும், இரண்டாவது விஷயம் காவல்துறையின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரம் குறித்தும் பேசியது.
விகாஸ் துபே என்ற பெயரில், கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ஒரு பெயர்பெற்ற கிரிமினலைப் பிடிப்பதற்காக, காவல்துறை அப்பகுதியில் நுழைந்தவுடன் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. பின்னர், குற்றவாளி பதுங்கியிருந்ததாக சொல்லப்பட்ட இடத்தை, காவல்துறையினர் பயணம் செய்த வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தின் மூலம் நெருங்க முயன்றபோது, அருகிலிருந்த கட்டடங்களின் மீதிருந்த இயந்திர துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது நமக்கு தெரிந்ததே. தன்னை நோக்கி காவல்துறை எப்போது வருகிறது, எப்படி வருகிறது உள்ளிட்ட விஷயங்கள் அந்த கிரிமினலுக்கு எப்படி தெரிந்தது? என்ற கேள்வி எழுகிறது. விகாஸ் துபே என்ற கிரிமினல் அம்மாநிலத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சி வந்தவர்.
முந்தைய காலங்களில், ஒரு ஆளுங்கட்சி அமைச்சரையே கொடூர முறையில் கொலைசெய்தவர்தான் இந்த விகாஸ் துபே. இவ்வளவு தைரியம் இருக்கும் அளவிற்கு, மாநிலத்தின் அரசியல், அதிகாரவர்க்க மற்றும் காவல்துறை மட்டங்களில் கொடிகட்டிப் பறந்தவர்தான் அவர்! விகாஸ் துபே மட்டுமல்ல, உத்திரப்பிரதேசத்தில் ரெளடிகளின் ராஜ்யம் என்பது புரையோடிப்போன ஒன்று.

தன்னை நோக்கி காவல்துறை வருகிறது என்பதை, அத்துறையிலிருக்கும் ஒற்றர்களின் மூலமே அறியும்போது, விகாஸ் துபே கும்பல் தப்பிஓட நினைக்கவில்லை. மாறாக, தன்னைத் தேடிவரும் காவல்துறையை தாக்க முடிவுசெய்கிறார்கள் அவர்கள். அந்தளவிற்கு அவர்களிடம் ஆயுத பலம் மற்றும் ஆதரவு இருக்கிறது.
காவல்துறை மற்றும் அரசியல் மட்டத்தில், விகாஸ் துபேவுக்கு இருந்த செல்வாக்குதான், சில பத்தாண்டுகளாக, விகாஸ் துபே, அம்மாநிலத்தில் கோலோச்ச முடிந்தது. அம்மாநிலத்தில், குற்றவியல் நீதி-பரிபாலன அமைப்பு எந்தளவிற்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கு, விகாஸ் துபே விஷயமே ஒரு பெரிய அத்தாட்சி!
பொதுவாக, இந்தியளவில், பொருளாதாரம், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொருளாதார பரவலாக்கல் தொடர்பான விஷயங்கள்தான் பெரும்பாலான நேரங்களில் சாதாரண நிலையிலான மற்றும் ஆழமான விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஆனால், சரியான குற்றவியல் நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் நல்ல நிர்வாகம் போன்றவை இல்லாமல், பொருளாதார முன்னேறத்தை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? ஒரு மாநிலத்தின் அடிப்படையான சீர்கொண்ட இயக்கத்திற்கு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்பது மிக மிக முக்கியமானது. இதுதான் ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாகும்.
கடந்த 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குற்றப் பதிவு பணியகத்தினுடைய ஆய்வின்படி, நாட்டிலேயே, உத்திரப்பிரதேசம்தான் அதிகளவு குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிகழும் கொலைகள், வரதட்சிணை மரணங்கள் மற்றும் முன்திட்டமிடப்படாத கொலைகளில், 20% வரை அம்மாநிலத்தில்தான் நடைபெறுகிறது என்று தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையால்தான், எந்த நிறுவனங்களும், அம்மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு, பொதுவாக, முன்வருவதில்லை.
இந்திய மக்கள்தொகையில் 17% ஐ கொண்டிருக்கும் அம்மாநிலம், இந்திய நாடாளுமன்றத்திற்கு 15%க்கும் கூடுதலான உறுப்பினர்களை அனுப்புகிறது. அந்தவகையில், நாட்டின் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக திகழ்கிறது உத்திரப்பிரதேசம்.
இதே நிலைதான் பீகாரிலும். இந்த இரண்டு மாநிலங்களும் சேர்ந்து, இந்திய மக்கள்தொகையில் 26% ஐக் கொண்டுள்ளன. மேலும், இந்திய நாடாளுமன்றத்திற்கு சுமார் 23% உறுப்பினர்களை அனுப்பி வைக்கின்றன. ஆனால், இந்த மாநிலங்கள் வெறுமனே சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மட்டுமல்ல, பல்வேறான முன்னேற்ற அளவுகோல்களிலும் மோசமாக பின்தங்கியுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களும், மானுட மேம்பாட்டுக் குறீயீட்டில் கடைசி இடத்தில் இருக்கின்றன. (பீகார் 0.576% மற்றும் உத்திரப்பிரதேசம் 0.596%).
ஆப்ரிக்காவில், உப-சஹாரா பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் நிலையை, இந்தப் புள்ளி விபரம் பிரதிபலிக்கிறது. ஆனால், அந்நாடுகளைப் போல் இல்லாமல், இந்த மாநிலங்களில் அற்புதமான வளங்கள் அமையப்பெற்றுள்ளன. அதற்கு காரணம், அங்குள்ள மோசமான நிர்வாகம் மற்றும் சமூக அமைப்புதான்.
நாட்டிலேயே, அதிக புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது உத்திரப்பிரதேசம். இந்த மாநிலத்தின் மக்கள்தொகையை, உலகளவில் வெறும் அரை டஜன் நாடுகளே விஞ்சியிருக்கின்றன. இங்கு 75 மாவட்டங்களும், 18 டிவிஷன்களும், 800 பிளாக்குகளும், இந்தியாவின் மொத்த கிராமப் பஞ்சாயத்துகளில் 15% பஞ்சாயத்துகளும், 12க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளும், 600க்கும் மேற்பட்ட நகரங்களும் உள்ளன.
எனவே, இப்படியான ஒரு அமைப்பை நிர்வகிக்க எப்படியான நிர்வாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் யோசித்துக் கொள்ளலாம். இப்படியான ஒரு பெரிய திரளை, வெறுமனே ஒரே ஒரு தலைமைச் செயலகத்திலிருந்து கட்டுப்படுத்திவிட முடியுமா?
மேலும், இம்மாநிலம், பல்வேறான ஜாதிய, மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த மற்றும் பழக்கங்கள் சார்ந்த விஷயங்களில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டது. ஜாதி என்பது இங்கு மிகவும் சக்திவாய்ந்த ஒரு விஷயம்! எனவே, இந்திய தலைநகரில் இம்மாநிலம் அரசியல் ஆதிக்கம் செலுத்தினாலும்கூட, அந்த ஆதிக்கத்தை சமூக-பொருளாதார முன்னேற்றமாக மடைமாற்ற முடியவில்லை.
ஏனெனில், இங்கு பிராந்தியளவிலான வேறுபாடுகள் அதிகம் உள்ளன. அம்மாநிலத்தால், அதன் சொந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியவில்லை.

எனவே, இங்கு வளர்ச்சி என்பது சாத்தியப்பட வேண்டுமெனில், இம்மாநிலத்தை எளிதாக நிர்வகிப்பதற்கு வசதியாக பல மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இதுதான் தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய முதல் அம்சமே!
மாநிலங்கள் பிரிப்பால் நிகழ்ந்த சாதக அம்சத்தையும் நாம் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க வ‍ேண்டும். உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட உத்ரகாண்ட், தனது தாய் மாநிலத்தைவிட 3 மடங்கு அதிகளவு தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது. மேலும், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களும், தங்களின் தாய் மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. எனவே, சிறந்த நிர்வாகத்திற்கு, அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலங்கள், பிரிக்கப்படுவது அவசியம்.
 
– கட்டுரையாளர் ராமநாத் ஜா