பி.எப். பணத்தில் இருந்து கல்லூரி மாணவிகளுக்கு இலவச பேருந்து வாங்கிய தம்பதி

|அந்த 96 அல்ல.. இது அற்புதமான, 1976 ஹேமலதா”  என்ற தலைப்பில் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள் எழுதிய முகநூல் பிதவு:

ராமேஸ்வர் பிரசாத் யாதவ். ஒரு டாக்டர் . ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது சுரி கிராமத்திற்கு காரில் போகிறார்.

கொட்டும் மழை.. சாலையோரத்தில் சில இளம் பெண்கள் தவிப்போடு நிற்கிறார்கள். டாக்டரின் மனைவி தராவதி, அந்த பெண்களை காரில் ஏற்றிக்கொள்ள கணவரிடம் சொல்கிறார்..

காருக்குள்ளே பேச்சு ஒடுகிறது.. காலேஜுக்கு சென்றுவர சரியாக பேருந்து வசதி இல்லையென்று பெண்கள் புலம்புகின்றனர். நேரத்திற்கு செல்ல முடியாமல், அடிக்கடி லீவு போடுவதால் கிளாசில் அட்டென்டன்ஸ் குறைகிறது என்றும் இன்னொரு பக்கம் போகும்போதெல்லாம் பையன்கள் தொல்லை கொடுப்பதால் காலேஜ் படிப்பே தேவையில்லை என்று பெற்றோர்கள் திட்டிக்கொண்டே இருப்பதாகவும் இளம் பெண்கள் ஆதங்கத்தை கொட்டுகின்றனர்..

அவர்கள் காரிலிருந்து இறங்கிசென்றுவிட்ட பிறகும் அவர்களின் வேதனை டாக்டரையும் மனைவியையும் உறுத்தியபடியே இருந்தது..

ஏதாவது இவர்களுக்கு செய்தே ஆகவேண்டும் என்று டாக்டர் தீர்மானிக்க மனைவி சந்தோஷத்துடன்
டபுள் ஓக்கே சொன்னார்.

டாக்டர் பிரசாத், தன்னும் பிராவிண்ட் பண்ட்லிருந்து 17 லட்சத்தை எடுக்கிறார். கையில் இருந்த சேவிங்ஸ் 2 லட்சத்தை போட்டு மொத்தம் 19 லட்ச ரூபாய்க்கு ஒரு பேருந்தை வாங்குகிறார்.

சுரி கிராமத்திற்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள பவாலா, கயம்புரா, பனேதி என மேலும் சில கிராமங்களின் மாணவிகள் பயன்பெறும் வகையில் பேருந்தை இலவசமாக இயக்க டாக்டர் முடிவுசெய்கிறார்.

மாணவிகள் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் பேருந்தின் ஓட்டுநரை தேர்வு செய்வதில்கூட அதிக கவனம் செலுத்துகிறார்.

நான்கு பேர் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள். அவர்களின் விவரங்களை மாணவியரின் பெற்றோரிடமே தருகிறார். கிட்டத்தட்ட ஒரு மனதாய் லட்சுமண் சிங் என்பவரை தேர்வு செய்கின்றனர்.

காலேஜுக்கு மாணவிகள் பயணம் செய்யும்போது பேருந்தில் எக்காரணம் கொண்டும் எந்த ஆணையும் ஏற்றக்கூடாது என்பது ஓட்டுநருக்கு இடப்பட்ட முதல் கட்டளை.

மாணவிகளுக்கான இலசவ பேருந்து இயக்கப்படுகிறது. ஆண்களை பேருந்தில் ஏற்றுகிறாரா ஓட்டுநர் என்று டாக்டரே தனிப்பட்ட முறையில் சோதிக்கிறார். நடுவழியில் கையாட்டும் அவரையே பேருந்தில் ஏற்றாமல், ஓட்டுநர் லட்சுமண் சிங் மாணவிகளை கண்ணும் கருத்துமாக அழைத்துச்செல்கிறார்.

மாணவிகள் எந்த தொல்லையும் இல்லாமல் காலேஜுக்கு சென்று படிக்கிறார்கள். போலீஸ், ராணுவம், மருத்துவம் என பல துறைகளில் கால் பதிக்க, அந்த இளம் பெண்களுக்கு டாக்டர் பிரசாத்தின் இலவச பேருந்து பெரும் ஊக்கியாக திகழ்கிறது..

டாக்டரின் நல்ல மனதை பார்த்து, டோல்கேட் சுல்தான்கள் மனமிரங்கி, நோ டோல் பீஸ் என்று சொல்லிவிட்டார்கள், மாதத்திற்கு அரசாங்கம் வசூலிக்கும் 5000 ரூபாய் சாலைவரியில் இருந்து விலக்கு கேட்டு டாக்டர் கடிதம் மேல் மேல் எழுதுகிறார்.. அரசாங்கத்தின் காதுகளுக்கு இதுவரை கேட்கவில்லை.

ஓட்டுநர், டீசல், பராமரிப்பு என மாதம் 35 ஆயிரம் ரூபாய் டாக்டருக்கு செலவாகிறது. இருப்பினும் வருத்தமே படாமல் சந்தோஷமாக செலவழிக்கிறார். காரணம் 1976ல் தொடர்புடைய ஹேமலதா என்பவர்தான்.

ஹேமலதா என்பது பெரிய பெண்ணோ வேறு யாரோ அல்ல. டாக்டருக்கு படிப்பதில் ஆர்வமாக இருந்த பிரசாத்- தராவதி தம்பதியருக்கு 1976ல் பிறந்த குழந்தை. சில மாதங்களிலேயே கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டு உடம்பெல்லாம் நீல நிறமாகி கண்ணை மூடிவிட்டாள் அந்த ஹேமலதா..

அதற்கு பிறகு மூன்று மகன்கள் பிறந்தாலும் முதலாக பிறந்த ஹேமலாவை டாக்டர் தம்பதியால் மறக்கவேமுடியவில்லை.. அதனால்தான் கொட்டும் மழையில் நனைந்தபடி லிப்ட் கேட்டு காரில் ஏறிய இந்த இளம் காலேஜ் மாணவிகள், தம்பதியரின் கண்ணுக்கு ஹேமலதாக்களாகவே தெரிந்திருக்கின்றனர்.

”ஒரு மகளை இழந்தேன், இன்றைக்கு ஒன்றல்ல இரண்டல்ல 50 ஹேமலதாக்கள் எனக்கு மகள்களாக கிடைத்துள்ளனர்” என ஆனந்த கண்ணீரோடு சொல்கிறார் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டாக்டர் ராமேஸ்வர் பிரசாத் யாதவ்.