உங்கள் குழந்தைகளுக்கு “நெற்றிக்கண்!” திறக்குமா?:  உண்மை அறிய இன்று மாலை வாருங்கள்!

“உங்கள் குழந்தை ஏழாம் (!) அறிவு பெற… கண்களை மூடிக்கொண்டே வண்ணங்களை கண்டறிய.. அற்புத பயிற்சி” என்கிற விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.. ஏன், நீங்களேகூட உங்கள் குழந்தைகளை இதுபோன்ற வகுப்புகளில் சேர்த்திருப்பீர்கள்.

மிட் ப்ரைய்ன் ஆக்டிவேசன் என்ற பெயரில் நடக்கும் இந்த வகுப்பில், குழந்தைகளின் “நெற்றிக்கண்”ணை திறக்கச் செய்வதாகவும், அவர்களது தனித்திறன் பெரிய அளவில் வளரும் என்றும் மந்திர வார்த்தைகளைப் போட்டு பெற்றோரை ஈர்க்கின்ற சில பயிற்சி நிறுவனங்கள்.அதாவது, “ எங்களது பயிற்சி மூலம் குழந்தைகளுக்கு நடு மூளை தூண்டப்பட்டு எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்சப்சன் கிடைக்கிறது” என்கின்றன இதுபோன்ற பயிற்சி மையங்கள்.

இரு நாள் பயிற்சிக்கு ஆயிரங்களில் ஆரம்பித்து ஆறு மாத பயிற்சிக்கு லட்சங்கள் வரை கட்டணம் நீள்கிறது.

“இது போன்ற அமைப்புகள் அறிவுக்குப் புறம்பான விசயங்களைக் கூறி பெற்றோரை ஆசை காட்டி ஏய்த்து பணம் பிடுங்குகின்றன” என்கிறது 51ஏ.எச் என்ற பொது நல அமைப்பினர்.

மேலும், “நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவது மட்டுமின்றி, ஏதோ நம்பமுடியாத சக்தி தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக குழந்தைகளை நம்பவைத்து அவர்களது மனநிலையில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறார்கள்.   நம் பிள்ளைகளையே நம்மிடம் கிட்ட பொய் சொல்ல வைத்துவிடுகிறார்கள்.

இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (31.08.2018 –  வெள்ளிக்கிழமை) மெட்ராஸ் ரிப்போர்ட்டர் கில்ட் அலுவலகத்தில் நடக்க இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கில் பணம் கட்டி, பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விட்டால், குழந்தைகளால் கண்களை கட்டிய பின்பும் படிக்க முடியுமா? கண்களை திறக்காமல் வண்ணங்களை அடையாளம் காண முடியுமா? இந்த பயிற்சிகளின் பின்னணி என்ன? சிறகில்லாமல், இறகை போல அந்தரத்தில் பறத்தல் மனிதர்களுக்கு சாத்தியமா? புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக அந்தரத்தில் மிதக்க முடியுமா? என்கிற கேள்விகளுக்கு அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மேலும்,  மிட் ப்ரைய்ன் ஆக்டிவேசன் என்ற பெயரில் பயிற்சி அளிக்கும் அமைப்புகளுக்கு ஒரு சவாலும் விடுத்திருக்கிறார்கள். அதாவது, “தாங்கள் அளிக்கும் பயிற்சி மூலம் நம்ப முடியாத “திறமைகளைப்” பெறலாம் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், இவற்றை உண்மை என நிரூபித்தால் ரூ. 10 லட்சம் பரிசு அளிக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார்கள்.

இன்றைய நிகழ்ச்சி:

மாலை ஐந்து மணிக்கு, மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் அலுவலக வளாகத்தில். )சென்னை பிரஸ் கிளப் அருகில், நாவலர் நகர், சேப்பாக்கம், சென்னை.)

தொடர்புக்கு: 8220480254