நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் டி.என். கோபாலன் அவர்கள் முகநூல் பதிவு:

ல வருடங்களுக்கு முன்…

ஜானகி அணி பொதுக்கூட்டம் மதுரையில். ப உ ச தேவையில்லாமல் பத்திரிகைகளையெல்லாமொரு பிடி பிடித்துக்கொண்டிருந்தார்.  கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, செய்தியாளர் வரிசையில் இருந்த நான் எழுந்து, இப்படி நீங்கள் தாக்குவதை நிறுத்தப்போகிறீர்களா நாங்கள் வெளிநடப்பு செய்யவா எனக்கேட்டேன்… அவருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி…ஏதோ வழிந்தார்…அவசர அவசரமாக ஆர் எம் வீ  மைக்குக்கு வந்து சமாதானம் சொன்னார் அல்லது எங்களுக்கு செய்தியனுப்பினார்…

ஆஹா என்று பின்னர் என்னை மற்றவர் பாராட்டினாலும், நானும் கெத்துதான் என நினைத்துக்கொண்டாலும், இதே போல எம் ஜி ஆர் பேசும் போது குறுக்கிட்டிருக்கமுடியுமா என்று  என்னையே கேட்டுக்கொண்டேன்… நிச்சயம் முடிந்திருக்காது…

எம் ஜி ஆர் செய்தியாளர் சந்திப்பு. மதுரையில் நேரம் எல்லாம் சொல்லுவார்கள் ஆனால் அவர் இஷ்டப்படிதான் வருவார், தேவுடு காக்கவேண்டியதுதான். ஒருவழியாக வந்துசேர்ந்தார் /  இடம்பிடிக்க அடிதடி. ஒரு வயதான செய்தியாளர் அவர் காலடியில் உட்கார்ந்தார்…எனக்கு கோபம் நான் எம் ஜி ஆர் முன்னிருந்த டீப்பாயின் மீது உட்கார்ந்துவிட்டேன் எல்லோரும் முறைத்துப் பார்த்தனர் நான் கண்டுகொள்ளவில்லை என் வீரம் அத்துடன் முடிந்தது..

சந்திப்பின் போது திடீரென்று பின் வரிசையில் நின்றுகொண்டிருந்த அகில இந்திய வானொலி நிருபர் செல்வ ராஜி்டம், எம் ஜி ஆர், “நீங்க எந்த பத்திரிகை ஏன் நான் சொல்றதையெல்லாம் எழுத மாட்டேங்குறீங்க…” என்று சரமாரியாகக் கேள்விகள்.

”யோவ் நீ சொல்றதை சொல்லிட்டுப் போ நாங்கவேணுங்கிறதை எழுதிப்போம்னு,” யாரும் சொல்லவில்லை. அந்த நிருபர் ஏதோ விளக்கம் சொல்லிப் பார்த்தார் .ஆனால் எம் ஜி ஆர் கேட்பதாக இல்லை.
“ஏ ஐ ஆர்ங்குறீங்க சி எம் சொல்றதைக்கூட ஒழுங்கா  குறிப்பெடுக்க  மாட்டேங்குறீங்க… நாங்க சொல்றதை எல்லாத்தையும் எழுதிகிட்டு கொண்டுபோய் கொடுங்க.. அவங்க முடிவு பண்ணிகிடட்டும்…நீங்க இப்டியெல்லாம் அலட்சியமா இருக்கக்கூடாது..” இப்படி சொல்லிக்கொண்டே போனவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, செல்வராஜை வெளியேறச் சொன்னார்.

எங்களனைவர்க்கும் அதிர்ச்சி…ஆனால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. நான் கூடத்தான்..
என்னையும்  வெளியேறச் சொன்னால் என் அலுவலகத்திடம் என்ன சொல்வது..அடுத்த மாத சம்பளம் வீட்டு வாடகை அப்படியும் ஏதோ சொல்ல முற்பட்டேன் அதற்குள் செல்வராஜ் வெளியேறிவிட்டார்… செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்தது.

முடிந்த பிறகு அவரைத் தொடர்பு கொண்டு நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் அவ்வளவுதான்.

புறக்கணிப்பு, வெளிநடப்பு, எகிறல் எல்லாம் ஜிக்னேஷ் மாதிரி ஆட்களிடம்தான் செல்லுபடியாகும் மற்றபடி நிர்வாகங்கள் அத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்காது,

நோண்டி நொங்கெடுத்துவிடுவார்கள் என்பது தான் கசப்பான உண்மை.