டில்லி

ன்று மகாகவி பாரதியாரின் 138 ஆம்  பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டரில் அவரைப்  புகழ்ந்து தமிழில் பதிவு இட்டுள்ளார்.

புரட்சிக் கவி எனவும் முண்டாசுக் கவிஞர் எனவும் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியாரின் 138 ஆம் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.   தனது கவிதைகள் மூலம் நாட்டு மக்களுக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டியவர் பாரதியார்.   அவரது பல பாடல்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பாரதியாரைப் புகழ்ந்து தமிழில் பதிவு இட்டுள்ளார்.  அவர் தனது பதிவில், மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. ” எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் “சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” எனப் பதிந்துள்ளார்.