விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமரை சந்திப்போம்! தீர்மானம் குறித்து ஸ்டாலின்

சென்னை,

ன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து முறையிடுவோம் என்றார்.

இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

‘இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில், முதல் தீர்மானமாக தற்கொலை செய்து கொண்ட 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

‘விவசாயிகளின் கோரிக்கையான விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. கோர்ட்டு ஆலோசனையின்படி விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்த வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி ஆலோசிப்பதற்காக சட்டசபை சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனே அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முக்கிய தீர்மானமாக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்  என்ற அடிப்படை யில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு கேட்டும், இன்று நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களை மக்களிடம் விளக்கும் வகையிலும் வருகிற 22-ந்தேதி சென்னையில் அனைத்து கட்சி பொதுக் கூட்டம் நடைபெறும்.

அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள். முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: To meet the Prime Minister soon for support farmers ! Stalin's description about resolution, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமரை சந்திப்போம்! தீர்மானம் குறித்து ஸ்டாலின்
-=-