மாலேகான்

பாகிஸ்தானை எதிர்க்க இஸ்லாமிய படை அமைக்க வேண்டும் மகாராஷ்டிரா மாநில மாலேகான் பகுதியின் இஸ்லாமிய தலைவர் முஃப்தி இஸ்மாயில் ராணுவத்தினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி மாலை காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரத்தில் உள்ள இஸ்லாமியத் தலைவர் முஃப்தி இஸ்மாயில் ஒரு அரசியல் தலைவரும் ஆவார். கடந்த 2006 ஆம் வருடம் நடந்த மாலேகான் தொடர் குண்டு வெடிப்புக்குப் பின் இவர் 2007 ஆம் வருடம் நகரசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மாலேகான் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக 2009 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட முஃப்தி இஸ்மாயில் 2014 ஆம் வருட தேர்தலில் தோல்வி அடைந்தார்.

புல்வாமா தாக்குதலை எதிர்த்து நேற்று முன் தினம் முஃப்தி இஸ்மாயில் மாலே கான் நகரில் போராட்டம் நடத்தினார். அப்போது அவர், “இது போன்ற பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது. இது இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான செயலாகும்.

இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் பெயரால் இவ்வாறு வன்முறை நடப்பதால் நான் இஸ்லாமிய படைப்பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும் என இந்திய ராணுவத்துக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

அந்த இஸ்லாமியப் படை மூலம் பாகிஸ்தானை அழிப்போம். அவ்வாறு ஒரு படைப்பிரிவு அமைக்கப்பட்டால் நான் மாலேகான் நகரில் இருந்து 25000 இஸ்லாமியர்களை இணைக்க தயாராக உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.