சென்னை:

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது சென்னை உயர்நீதி மன்றம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பான  வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே வேலைக்கு செல்ல வேண்டும் என கடந்த வாரம் உயர்நீதி மன்றம் அறிவித்திருந்தது. ஆனால், கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் போக்குவரத்து தொழிலாளர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும் என்று முறையிட்டார்..

இந்நிலையில் வழக்கின் இன்றைய  விசாரணையின்போது, சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் அரசுக்கு  முறையாக நோட்டீஸ் கொடுத்துதான் போராட்டம் நடத்துகிறோம் என்றும்,  திடீர் என்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவில்லை என்றும்  விளக்கம் அளித்துள்ளது.

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அரசுக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

போக்குவரத்தை நடத்த முடியாவிட்டால் அதை கலைத்துவிட்டு தனியார்மயம் ஆக்குங்கள் என்றும்  புதிய பேருந்துகளை அறிவிக்கும்போதே அதை  தனியார் மயமாக்குங்கள்  என்றும் யோசனை தெரிவித்து உள்ளது.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான  நிலுவை தொகை உடடினயாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்து.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்த பதில் மனுவில்,  போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பின்புலமாக திமுக இருப்பதாகவும், கடந்த 7 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.