யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து

புதுடெல்லி:

இந்தியாவில் உள்ள யானைகளை பாதுகாக்க, வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவேண்டுமே தவிர, காட்டை விரிவுபடுத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

‘தி பிரிண்ட்’ இணையம் வெளியிட்டுள்ள செயதியின் விவரம் வருமாறு:

கடந்த 3 ஆண்டுகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையே நடந்த  மோதலில், 1,714 பேரும், 373 யானைகளும் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் யானை தாக்கி இரண்டு நாளுக்கு ஒரு முறை 3 பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
உயிரிழப்பு மட்டுமல்ல, யானைகளால் சொத்து சேதமும் ஏற்படுகிறது. மேலும் தந்தத்துக்காகவும், மின்சாரம் வைத்தும், விபத்திலும் யானைகள் இறப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்த விபத்துகள் இந்திய வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. வனப் பகுதியில் யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பரப்பளவில் 22 சதவீதம் வனத்துறையிடம் உள்ளது.

மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், வறட்சி ஒரு புறமும், அதிக மழையால் வெள்ளம் கரைபுரண்டோடுவது மறுபுறமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

வறட்சி காரணமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக யானைகள் இடம் பெயர்கின்றன.

காட்டில் வாழும் யானைகளின் இடத்தை மனிதன் ஆக்கிரமித்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறான். வறட்சியால் குடிநீர், உணவு கிடைக்காமல் யானைகள் கீழே இறங்கி வருகின்றன.

யானைகள் வாழ்விடத்தில் வனவிலங்கு தாழ்வாரம் அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும். குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவை இடம்பெயராது என்று கூறுகின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.